31/05/2021
ஓய்வாகவோ களைப்பாகவோ இருக்கும் நேரங்களில் புறாக்கூட்டுக்கு முன்னே அவற்றின் நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருப்பேன். அது மனதிற்கு ஆறுதலைத் தருகின்றது. புறாக்களின் உடல் அழகு பார்ப்போரின்
மனதை வசீகரிக்கின்றது. சாதாரணமாக புறாக்கள் 20-25 செ.மீ. வரை வளரும். உடலானது தலை, கழுத்து, நடுவுடல், இறகுகள், வால் மற்றும் கால்கள் என்ற பகுதிகளைக் கொண்டிருக்கும். உருண்டை வடிவத் தலைப்பகுதியின் முன்புறத்தில் கூர்மையான அலகு இருக்கின்றது.
அலகின் மேற்புறத்தில் தடித்த ராம்போதீக்கா (Rhamphotheca) எனும் உறை உள்ளது. மேல் அலகின் அடிப்புறத்தில் நாசித்துவாரங்கள் உள்ளன. அவற்றைச் சுற்றிலும் அலகுப்பூ (cere) எனும் பருத்த தோல் பகுதி உள்ளது. இரண்டு பக்கமும் சற்றுப் பெரிதாக இரண்டு கண்கள் இருக்கின்றன. கண்களின் பின்புறமாக இரண்டு செவித்துவாரங்கள் உள்ளன. இவையனைத்தும் புறாக்களின் முகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.நீண்ட கழுத்து. இலை வடிவிலான உடல் பக்கமாகவுள்ள இரண்டு இறக்கைகள் அவற்றை விரித்தால் தென்படும் அழகிய சிறகுகள், அதனைத் தொடர்ந்து நீண்டுள்ள வால்பகுதி, சிவப்பு நிறத்திலான இரு கால்கள், அதிலுள்ள நகங்கள் இவை யாவும் புறாக்களின் உடலுக்கு வணப்பையும் மிடுக்குடன் கூடிய தோற்றத்தையும் கொடுக்கின்றன. இவற்றின் வால் பகுதியில் உள்ள கோதுச் சுரப்பி (uropygial gland) எனும் எண்ணெய்ச் சுரப்பிகள் மூலம் இறகுகளை அலகினால் நீவிவிட்டு தமது உடலை கவர்ச்சியாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்கின்றன. உண்மையில் புறாக்களை நன்கு அவதானித்தால் அவற்றின் உடல் அழகே மனதிற்குப் பெரிதும் ஆறுதலையும் உட்சாகத்தையும் வரவழைக்கின்றன. அந்த மன ஆறுதலுக்காகவோ என்னவோ உலகமே இன்று புறாவை சமாதனப் பறவையாக ஏற்றிருக்கின்றது.